Town News|

அன்பிற்குரிய இஸ்லாமிய உடன்பிறப்புகள் அனைவருக்கும் அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)…

தியாகத்தின் சேதி திக்கெட்டும் பரவும் “ஈதுல் அல்ஹா” புனித ஹஜ்ஜுப் பெருநாள் நன்னாளில் முதற்கண் உங்கள் அனைவருக்கும் ஹஜ்ஜுப் பெருநாள் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்வதில் மிக்க மகிழ்ச்சி அடைகிறேன். ஈத் முபாரக்!

கடந்த இரண்டு வருடங்களாக உலகத்தை உலுக்கும் கொடும் தொற்றான கொரோனாவின் கோரப்பிடியில் நாம் அனைவரும் உழன்று கொண்டிருக்கிறோம்.

கடந்த நோன்பு பெருநாளில் தொழுகையை கூட பள்ளிவாசல்களில் கூட்டாக நிறைவேற்ற முடியாத வண்ணம் சர்வதேச ரீதியில் கொரோனாவின் அச்சம் மேலோங்கி இருந்தது.

ஆனால், மலர்ந்திருக்கும் இத்தியாகத் திருநாளில் மட்டுப்படுத்தபட்ட அளவில் மேன்மைமிக்க ஹஜ்ஜுடைய கடமைகளை மற்றும் தொழுகை உள்ளிட்ட அமல்களை நமது பள்ளிவாசல்களில் நிறைவேற்றக் கூடிய வாய்ப்பு உரிய தரப்பினரால் உறுதிப்படுத்தப்பட்டிருக்கிறது.

தியாகத்தின் உன்னதத்தையும், உயர் பொறுமையினையும் அதன் நிமித்தம் கிடைக்கும் இறையருள் நேசத்தையும் உணர்த்தும் இந்த இனிய நாளில் நம்மை சூழ்ந்திருந்த சில தடைகள் நீங்கியமைக்கு எல்லாம் வல்ல இறைவனுக்கு நாம் நன்றி கூறுவோம்.

மேலும், நாம் விரும்பியோ விரும்பாமலோ தியாகங்கள் மனித உளவியலை மென்மேலும் செம்மைப்படுத்தும் உன்னத வாழ்வியலின் அர்த்தங்கள் நிறைந்த உட்பொருள் ஆகும்.

இப்ராஹிம் நபி செய்யத் துணிந்த தியாகமே ஹஜ் எனும் பேரின்பத்தை நமக்கு ஏற்படுத்தியது. அது போல, உலக முஸ்லிம் உம்மத்தை பல கோணங்களில் ஆக்கிரமித்து நிற்கும் துன்ப துயரங்களுக்கு பின்னால் தியாகத்தின் இன்பச் செய்தி காத்திருக்கிறது என்பதை நாம் அனைவரும் உணர வேண்டும்.

உலக ஒழுங்கை புரட்டி போட்டிருக்கும் கோவிட்-19 எனும் கொடிய வைரஸை விரட்டியடிக்க உலக மக்களாகிய நாம் இந்த நாள் வரை செய்திருக்கும் உழைப்பும்,அர்ப்பணிப்பும்,தியாகமும் அளப்பரியது.

உலக வல்லரசுகளே திகைத்து நிற்கும் கொரோனா பெரும் தொற்றினை முடிவிற்கு கொண்டு வந்திட இன்னும் சில தியாகங்களை,பொறுமைகளை நமக்குள் விதைக்க வேண்டியிருக்கிறது.

பெருநாள் மகிழ்வான நாள் என்பதற்காக முக கவசங்களுக்கு நாம் விடுமுறை அளித்திடக் கூடாது. சமூக இடைவெளியை மறந்து கூட்டம் கூட்டமாய் பெருநாள் பெருமிதத்தில் நாம் அங்குமிங்கும் சங்கமித்தல் கூடாது.

மேலும், முஸ்லிம்களின் பெருநாள் கொண்டாட்டத்தினால் மீண்டுமொரு “ஹஜ் கொரோனா கொத்தணி” உருவாகி விட்டது என்று இத்தேசத்தின் இனவாதிகளின் வாய்களுக்கு நாம் அவலாய் மாறி விடக்கூடாது.

கடந்த நாட்களைப் போல இந்த நாட்களையும் கவனமாய் கடப்போம். இப்புனித நாளில் அதிகமதிகம் இறைவனை துதிப்போம்.

நாம் அனைவரும் உயிராய் நேசிக்கும் இலங்கைத் தாய்த்திரு நாட்டில் இன ஒற்றுமையும்,இன நல்லிணக்கமும், சகவாழ்வும், சகிப்புத்தன்மையும்,சௌஜன்யமும் மேலோங்க உள்ளத்தால் உடன்படுவோம்.

என்றும் மக்கள் பணியில்

மகிழ்வுறும்,

உங்கள் தோழன்…

அதாஉல்லா அகமட் ஸகி

முதல்வர்,

மாநகர சபை

அக்கரைப்பற்று.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Close Search Window